திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா தேரோட்டம்……

முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில், அன்னம், பூதம், வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.


இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.


தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வாசலில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த பெரிய தேரில் எழுந்தருளினார்.

அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னால் விநாயகர் சிறிய தேரில் புறப்பட, அதனை தொடர்ந்து முருகப் பெருமான் பெரிய தேர் ரத வீதிகள் மற்றும் கிரிவல பாதையில் சுற்றி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தார்கள்.

ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர்மோர் பந்தல் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *