எங்கும், எதிலும் நிறைந்திருக்கும் இறைவன் !!

முன்னொரு காலத்தில் குருகுலத்தில் தங்கி பலர் கல்வி கற்றனர். அவர்களுக்கு அனைத்துவிதமான போதனைகளையும் வழங்கிய அந்த குருகுலத்தின் குரு, தன்னுடைய சீடர்களிலேயே மிகவும் திறமைசாலியும், புத்திசாலியுமான சைதன்யா என்பவன் மீது கூடுதல் பாசம் காட்டினார். சைதன்யாவுக்கு 16 வயது நிரம்பி விட்டது. அவன் தன் குருவிடம் அனைத்து கலைகளையும், ஞான போதனைகளையும் கற்றுவிட்டான்.

அவன் தன் வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த குரு, சைதன்யாவை அழைத்து, “நீ இனி இல்லம் செல்லலாம். உன்னோடு இறைவன் துணை இருப்பார்” என்று ஆசி வழங்கினார்.

அதைக்கேட்ட சைதன்யா, “குருவே.. எனக்கு எல்லாம் போதித்தீர்கள். ஆனால் நான் கடவுளை காணவில்லையே. கண்ணில் தெரியாத ஒருவர் எனக்கு எப்படி துணையிருப்பார்” என்று வினவினான்.

உடனே குரு, “சைதன்யா.. உன் கேள்விக்கு பதிலளிக்கிறேன். அதற்கு முன்பாக நீ ஒரு வேலை செய்ய வேண்டும். இந்த வழியாக காட்டிற்குள் புகுந்து சென்றால் அந்த பக்கம் சுனந்தநகர் என்ற ஊர் இருக்கும். அங்கே என்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரை சந்தித்து நலம் விசாரித்து வா” என்று அனுப்பினார். வழியில் உணவுக்காக தன் மனைவியிடம் சொல்லி சில பதார்த்தங்களையும் செய்து கொடுத்து அனுப்பினார்.

காட்டின் வழியாக சைதன்யா சென்று கொண்டிருந்தபோது, அங்கே ஒருவர் சில செடிகளை தடவிப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் அதை முகர்ந்து பார்த்து பறித்து, தான் வைத்திருந்த பையில் சேகரித்தார். அவர் கண் தெரியாதவர் என்பதை உணர்ந்து கொண்ட சைதன்யா, அந்த நபரிடம் சென்று “ஐயா.. இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு அவர், “நான் ஒரு வைத்தியன். பாம்புக் கடிக்கான மூலிகையை தேடி வந்தேன். கண் பார்வை இல்லாததால், முகர்ந்து பார்த்து அதை சேகரிக்கிறேன். நீ காட்டிற்குள் வந்திருக்கிறாய்.. உனக்கு இந்த மூலிகை தேவைப்படலாம். வைத்துக் கொள்” என்று கூறி மூலிகையில் சிறிதளவைக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக்கொண்ட சைதன்யா, “ஐயா.. இங்கே. தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்க, அருகில் ஒரு கிணறு இருப்பதாக அவர் சொன்னார். அங்கு சென்று நீர் அருந்தி விட்டு பயணத்தை தொடங்கிய சைதன்யா, ஓரிடத்தில் ஓய்வெடுத்தான்.

சில பதார்த்தங்களை சாப்பிட்டு விட்டு, மரத்தடியில் தூங்கினான். அப்போது ஏதோ சத்தம் கேட்டு எழுந்தவன், அங்கே ஒரு முயல் வேகமாக ஓடுவதைப் பார்த்தான். அப்போது மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழப்போவதையும் சைதன்யா பார்த்தான். உடனே அங்கிருந்து அகன்றான். அவன் தூங்கிய இடத்திலேயே அந்த பெரிய கிளை விழுந்தது.

பின்னர் பயணத்தை தொடங்கியவன், இரவில் ஊரை அடைந்தான். இரவு என்பதால் ஒரு சத்திரத்தின் வாசலில் தங்கினான். அங்கே பசியோடு இருந்த ஒருவருக்கு தான் மீதம் வைத்திருந்த பதார்த்தங்களை வழங்கினான்.

பின்னர் சிறிது கண்ணயர்ந்த சைதன்யாவுக்கு ஒரு சத்தம் கேட்டது. விழித்து பார்த்த போது, அருகில் ஒருவர் வாயில் நுரைதள்ள விழுந்து கிடந்தார். அவரை விஷப்பாம்பு தீண்டி இருந்தது. உடனே தன்னிடம் இருந்த மூலிகையை சாறு எடுத்து அந்த நபருக்கு கொடுக்க, சில நிமிடங்களில் அவர் இயல்புக்கு திரும்பினார்.

அவரைக் காப்பாற்றிவிட்டு, குருவின் சகோதரர் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு, மீண்டும் குருகுலம் திரும்பினான். தான் இங்கிருந்து புறப்பட்டது முதல், வருவது வரை நடைபெற்ற அனைத்து விஷயங்களையும் தன் குருவிடம் சொன்னான். இப்போது குரு, “ஒரு வழியாக கடவுளை பார்த்துவிட்டாய் அல்லவா?” என்று கேட்டார். சைதன்யாவோ, “நான் எப்போது கடவுளைக் கண்டேன் குருவே..” என்றான்.

“ஒருவரை பிழைக்க வைப்பாய் என்பதை அறியாமல், உனக்கு பாம்புக்கடிக்கான மூலிகைகளைத் தந்தாரே, அவர்தான் கடவுள். உன் தாகம் தீர்க்க, காடாக இருந்தாலும் அங்கே கிணறு வெட்டி வைத்திருந்த முகம் தெரியாதவரும் கடவுள்தான். உன்னைக் காப்பாற்ற சத்தம் எழுப்பிய முயலும் கடவுள்தான். பசியோடு இருந்தவருக்கு உணவளித்தாயே அப்போது நீ அவருக்கு கடவுள். பாம்பு தீண்டி இறக்க இருந்தவரை, காப்பாற்றியபோது அவருக்கும் நீ கடவுள். இவ்வளவு உருவங்களின் இறைவனைப் பார்த்த பிறகுமா, ‘கடவுளைக்காணவில்லை’ என்கிறாய்” என்று கேட்டார், குரு. சைதன்யாவுக்கு எல்லாம் புரிந்தது. எங்கும், எதிலும் இறைவன் அரசாட்சி செய்வதை புரிந்துகொண்டான்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *