சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட 7 பேருக்கு விசிக சார்பில் விருதுகளை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் பட்டியலினம் அல்லாத சான்றோரை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் சமூகம், அரசியல் மற்றும் கலை-இலக்கியம் ஆகிய துறைகளில் அரும்பணியாற்றி வரும் ஆளுமைகளுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் விசிக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளுடன், 2022-ம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ என்ற விருதும் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விசிக விருதுகள் வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் எம்பி, பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வரவேற்றுப் பேசினார். தகுதியுரையை வாசித்த திருமாவளவன், 7 பேருக்கான விருதுகளையும், ரூ.50 ஆயிரத்துக்கான பொற்கிழியையும் வழங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கே.சொக்கலிங்கத்துக்கு அம்பேத்கர் சுடர், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனுக்கு மார்க்ஸ் மாமணி, மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் ஹென்றி டிபேனுக்கு பெரியார் ஒளி, சாமித் தோப்பு அடிகளார் பால.பிரஜாபதிக்கு காமராசர் கதிர், சமூக செயற்பாட்டாளர் ரூத்மனோரமாவுக்கு அயோத்திதாசர் ஆதவன், ஐஎன்டிஜே மாநில துணைத் தலைவர் முகமது முனீருக்கு காயிதே மில்லத் பிறை, நாமக்கல் தமிழறிஞர் பொ.வேல்சாமிக்கு செம்மொழி ஞாயிறு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மு.வீரபாண்டியன் பேசும்போது, “சமூகம் மாற வேண்டும் என்று களமாடுகிற ஒரு பேரியக்கத்தின் சார்பில் கிடைத்துள்ள இந்த விருது மிகுந்த மரியாதைக்குரியது.
தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆதரவு கோரிய நிலையில், ஆளுநர் ஆட்சியில் அமர்ந்துவிடக்கூடாது என்பதை ஆராய்ந்து நாங்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். எங்களை யாரும் நிர்பந்திக்கவில்லை.
சிலர் சொல்வதுபோல் சோபா, கல்லாப்பெட்டி போன்ற நிபந்தனைகள் எல்லாம் எங்களுக்கு இல்லை.
விடுதலைக்கு போராடுகிறவர்கள் அருகில் இவை ஒருபோதும் வராது. பாஜகதான் எங்கள் பகையே தவிர, மற்ற ஜனநாயக சக்திகள் எங்களுக்கு பகையல்ல” என்றார்.
வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் வன்னியரசு, “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற திருமாவளவனின் முழக்கம் இன்றுவரை அடித்தட்டு மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறது.
‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று அவர் வைத்த முழக்கம் இன்று எட்டப்பட்டிருக்கிறது.
விசிகவை சிதைக்க வேண்டும், கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பரப்பப்பட்ட அவதூறுகளை எல்லாம் முறியடித்து தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விசிக நிற்கிறது.
விசிகவை விடுத்து தமிழகத்தில் எந்த அரசியலும் நடக்காது” என்று தெரிவித்தார்.
விழாவில் விசிக அமைப்புச் செயலாளர் லயன் ஆர்.பன்னீர்தாஸ், தலைமை நிலையச் செயலாளர்கள் இளஞ்சேகுவேரா, தமிழ்ச்செல்வன் செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.