இலங்கை ராணுவம் மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும்- புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் !!

புதுச்சேரி:
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இலங்கை கடற்படை 13 பேரை சிறை பிடித்துள்ளது. இதில் 2 மீனவர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்காலை சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட 13 பேர் இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் கிளிஞ்சல் மேடு செந்தமிழன், நாகை நம்பியார் நகர் பாபு ஆகியோர் காயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு நமது நாட்டுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுத உள்ளார். தொலைபேசி மூலமும் பேசி அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பார்.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சை அளிக்க புதுச்சேரிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பும் புரிதலும் இருக்க வேண்டும்.

கடலில் எல்லை எங்குள்ளது என்று யாருக்கும் தெரியாது. மீன் வளர்ந்தது மேட் இன் இந்தியாவா? மேட் இன் இலங்கையா? என கூற முடியாது. கடலில் மீன் என்பது பொதுவான விஷயம்.

இதனால் இலங்கை அரசு இலங்கை ராணுவம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். நாமும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.

நாமும் புரிதலோடு நடந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுப்பதும் புரிதலும் இலங்கை ராணுவத்திடம் இல்லை. அவசரப்படுகிறார்கள்.

புதுச்சேரியை சேர்ந்த 20 படகுகள் இலங்கையில் உள்ளன. அவற்றையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும்

தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை மீனவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் இந்த முறை துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *