முதல்வரின் போலி நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு பெருகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கடந்த 5-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், முன்னாள் தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் 1 கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்குவதற்கு பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கையெழுத்து இயக்கம் குறித்து அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுகவின் 60 ஆண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்துக்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர்.
ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கண்களைத் திறந்து பாருங்கள் முதல்வரே.
உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960-கள் அல்ல. அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.