திருப்பரங்குன்றத்தில் தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்!!

திருப்பரங்குன்றம்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் வேறு எந்த ஸ்தலங்களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியின் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் சேவல் கொடி சாற்றப்பட்டு தங்க கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதுரையில் இருந்து சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிகள் கோவிலுக்கு புறப்பாடானார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
தொடர்ந்து கோவிலின் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினார்.


அப்போது மீனாட்சி அம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு திருமண நிகழ்ச்சிகள் நடை பெற்று மங்கள வாத்தியம் முழங்க சுப்ரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக நடை பெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.

தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உபயோகாரர் சார்பில் கோயில் கந்த சஷ்டி மண்டபம் வள்ளி தேவசேனா திருமண மண்டபங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.


மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மின்விசிறி வசதிகள், குளிர்சாதன வசதியும் குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 9 இடங்களில் திரைகள் வைக்கப்பட்டன.


இன்று மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை உடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (19-ந் தேதி) காலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள கிரிவல பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.


விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *