”1500 ஆண்டுகள் பழமையான `சிவகிரி முருகன்’ திருக்கோவில்”!!

தென்காசி மாவட்டத்தில் சிவகிரி என்னும் ஊரில் உள்ள மலை மீது அமைந்திருக்கிறது, பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில். சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலின் மூலவராக ‘பால சுப்பிரமணியர்’ உள்ளார். உற்சவரின் திருநாமம், முத்துக்குமாரர் என்பதாகும். இவ்வாலய தீர்த்தமாக சரவணப் பொய்கை உள்ளது.

சூரபத்மனை அழித்த பிறகு தெய்வானையை மணப்பதற்காக, முருகப்பெருமான் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். அப்போது முருகனை தரிசனம் செய்ய வேண்டி அகத்திய முனிவர் இந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவருக்கு தரிசனம் அளித்த முருகப்பெருமான், அகத்தியரின் விருப்பப் படியே இந்த மலை மீதும் வாசம் செய்தார். பின்னாளில் இம்மலை மீது ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு பாலகராக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

எனவே இவர் ‘பாலசுப்பிரமணியர்’ என்று பெயர் பெற்றார். அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் இருக்கிறது. இங்கு முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.


பாதகமான கிரக அம்சங்களை எதிர்கொள்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்திற்காக இங்கு வழிபாடு செய்கிறார்கள். பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.


பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள், அந்த பிரச்சினைக்கு காரணமான கிரகத்திற்கு உரிய நாளில் இங்குள்ள முருகனை வழிபட்டு சென்றால், நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு முருகப்பெருமான் தனது ஜடாமுடியையே, கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இது முருகப்பெருமானின் அரிய வடிவம் ஆகும்.


கிரகப் பிரச்சினை உள்ளவர்கள், ராசி சின்னங்களுடன் ஒரு உலோகத் துண்டை (தகடு), முருகப்பெருமானின் பாதத்தில் வைக்கிறார்கள். இதன்மூலம் பக்தர்களின் கிரக சம்பந்தமான பிரச்சனைகள் அகலும் என்பது ஐதீகம்.

மலைகள் மற்றும் நீர் வளங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் மிகுந்ததாக, இந்த மலைக் கோவில் திகழ்கிறது. பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ள குன்று ‘சக்தி மலை’ என்று அழைக்கப்படுகிறது. இடதுபுறம் சிவன் மலை உள்ளது.

சிவனுக்கும், சக்திக்கும் இடையில் சோமாஸ்கந்த வடிவத்தில் இங்குள்ள முருகன் காட்சி தருகிறார். முருகன் சன்னிதியின் வலதுபுறம் சுந்தரேஸ்வரரும், இடதுபுறம் அன்னை மீனாட்சியும் உள்ளனர்.


பங்குனி பிரம்மோற்சவத்தில் உற்சவரான முத்துக்குமாரர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். திருவிழாக் காலங்களில் மூன்று நாட்கள் மட்டுமே முருகப் பெருமானின் ஊர்வல தரிசனம் கிடைக்கும். மற்ற நாட்களில் கோவிலுக்குள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள், சனி பகவான், அஷ்டபுஜ துர்க்கை மற்றும் இடும்பன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

முருகப்பெருமானின் கருவறை கோஷ்டத்தில் பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரரின் எதிரே லிங்கோத்பவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.

மலையின் நடுவில் காளி அன்னை சன்னிதி உள்ளது. காலையிலும், மாலையிலும் முதல் பூஜை இந்த காளியம்மனுக்குத்தான் செய்யப்படுகிறது. அதன் பிறகுதான் முருகப்பெருமானுக்கு வழிபாடு நடைபெறும்.


பவுர்ணமி தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான் நவக்கிரக முருகனாக போற்றப்படுகிறார். இங்கு உள்ள விநாயகருக்கு ‘அனுக்ஞை விநாயகர்’ என்று பெயர்.

பங்குனி பிரம்மோற்சவம், ஐப்பசியில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மாசி மகம் ஆகியவை இந்த கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். திருச்செந்தூர் கோவிலில் செய்யப்படும் முறைப்படியே, இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

பொதுவாக கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆலயத்தில் 11 நாட்கள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 11-வது நாளில் முருகப்பெருமானுக்கு முடிசூட்டு விழா நடைபெறும்.


அப்போது அரியணையில் முருகனை அமரச் செய்து, தங்க கிரீடம் அணிவித்து, அரச அதிகாரத்தை குறிக்கும் செங்கோல் கொடுக்கப்படும். பின்னர் அரச அங்கியில் முருகன் வீதி உலா வருவார். இதனை ‘பட்டினப் பிரவேசம்’ என்று சொல்வார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


அமைவிடம்
மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழித்தடத்தில் 108 கி.மீ. தொலைவில் சிவகிரி உள்ளது. ராஜபாளையத்தில் இருந்தும் தென்காசிக்கு பேருந்து வசதி உள்ளது. அந்த பேருந்துகள் சிவகிரி வழியாகத்தான் செல்லும். சிவகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *