கோவை;
கோவையிலிருந்து பிரத்தியேக உடையை அணிந்து ரூ.70 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற இருவரை கேரளா போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவையிலிருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக கேரள மாநிலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை கேரளா எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடியில் பாலக்காடு மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவையிலிருந்து கேரளா நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர் மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரின் உடையை சோதனை செய்தனர். அப்போது உடைக்குள் பிரத்தியேக உடை ஒன்றை அணிந்து, அதில் கட்டு கட்டாக பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் முழுமையாக சோதனையிட்டபோது அதில் ரூ.70 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தங்கத்தை கடத்தி வந்தவர்கள் கோவையை சேர்ந்த சாகர் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் எங்கிருந்து பணம் வாங்கி வந்தார்கள், யாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரத்தியேக உடையில் 70 லட்சம் பணம் மற்றும் தங்கத்தை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.