ஆபத்தில் சிக்கிக் கொண்டவர்கள், உடனடியாக 100ஐ தொடர்பு கொண்டு, காவல்துறையை அழைத்து பயன்பெறுங்கள் – சென்னை மாநகர காவல் ஆணையர்….

சென்னை:
ஆபத்தில் சிக்கிக் கொண்டவர்கள், உடனடியாக 100ஐ தொடர்பு கொண்டு, காவல்துறையை அழைத்து பயன்பெறுங்கள் என காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுத்து நிறுத்த போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் ஆபத்தில் இருப்பவர்கள் அதுகுறித்த தகவல்களை அவசர அழைப்பு எண்ணான 100க்கு தொடர்பு கொண்டு உடனடியாக தெரிவித்தால் போலீஸார் சம்பவ இடம் விரைந்து உதவ, உதவியாக இருக்கும் என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். மேலும், 5 முதல் 10 நிமிடங்களுக்குள் ரோந்து போலீஸார் நிகழ்விடம் வந்து உதவிக்கரம் நீட்டுவார்கள் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும், அவர் கூறுகையில், கடந்த 6ம் தேதி முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண், அவசர உதவி எண் 100ஐ தொடர்பு கொண்டு எனது 13 வயது மகன் செல்போன் செயலி வாயிலாக வாகனத்தை புக் செய்து சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை உடனே மீட்டுத் தாருங்கள் என கதறி அழுதார். இதையடுத்து, போலீஸார் சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநரை தொடர்பு கொண்டு சிறுவனை பத்திரமாக மீட்டுக் கொடுத்தனர்.

இதேபோல், பாரிமுனையைச் சேர்ந்த கீர்த்தனா (28) என்ற பெண் கடந்த 10ம் தேதி ஓலா ஆட்டோ புக் செய்து பயணம் செய்த போது சில முக்கிய ஆவணங்களை மறதியாக ஆட்டோவில் தவற விட்டு சென்றுள்ளார். உடனே கீர்த்தனா சென்னை பெருநகர காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனே ஓலா ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் தொடர்பு கொண்டு பயணி தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு கூறியதின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் கீர்த்தனாவிடம் ஆவணங்களை பத்திரமாக ஒப்படைத்தார்.

இப்படி சென்னையில் பல்வேறு சம்பவங்களில் பொது மக்களின் அரணாகவும் காவல் அவசர அழைப்பு உதவி எண் செயல்பட்டுள்ளது. எனவே, ஆபத்தில் இருப்பவர்கள் உடனடியாக 100ஐ அழைத்து உதவி கோரலாம் என காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *