விசாகையில் யோகா தின பிரமாண்ட நிகழ்வில் பிரதமர் மோடி…..

விசாகப்பட்டினம்:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் மற்றும் சினிமா, வர்த்தக பிரமுகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று யோகாசனங்கள் செய்தனர்.

இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் நாளாக சர்வதேச யோகா தினம் இருக்கட்டும். யோகா என்பது வெறும் தனிப்பட்ட பயிற்சியாக மட்டுமல்லாமல், உலகளாவிய கூட்டாண்மை மற்றும் ஒற்றுமைக்கான சக்திவாய்ந்த கருவியாகவும் ஏற்கப்பட வேண்டும். யோகாவை கூட்டு நல்வாழ்வுக்கான பங்களிப்பாக ஒவ்வொரு தேசமும் ஏற்க வேண்டும்.

உடல் பருமன் என்பது இன்று சர்வதேச அளவில் பெரிய சவாலாக உள்ளது. யோகா மூலம் 10 சதவீத உடல் பருமனைக் குறைக்கலாம் என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நான் சொல்லி இருந்தேன்.

இந்த சவாலை மக்கள் ஏற்க வேண்டுமென இந்நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 2014-ல் ‘ஜூன் 21’-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா அறிவித்தது. அதன் பின்னர் இந்த 11 ஆண்டுகளில் 174 நாடுகளில் யோகா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படி உலகத்தை யோகா இணைத்துள்ளது” என பிரதமர் மோடி பேசினார்.

காலை சுமார் 6 மணி அளவில் இந்த யோகா பயிற்சிகள் தொடங்கின. ஆந்திர மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களிலும் யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவற்றின் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 5.5 லட்சம் பேர் வரை யோகா செய்து உலக சாதனை படைக்கப்பட்டது. பிரதமர் உட்பட விவிஐபிக்கள் வருகையால் விசாகப்பட்டினத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமர் மோடி இந்த நிகழ்வில் யோகாசனம் செய்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் பலரும் ஒன்றாக இணைந்து யோகா செய்தனர். இதில் பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் யோகா பயிற்சி செய்தார். புதுச்சேரியில் கடற்கரை சாலையில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் யோகா பயிற்சி நிகழ்வில் பங்கேற்றனர்.

இதேபோல உலக நாடுகளிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஜப்பான், ஜிம்பாப்வே உள்ளிட்ட உலக நாடுகளில் மக்கள் பலர் கூடி யோகா செய்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *