சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனி அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்த்திய சாதனைகள் நாம் ஒருமுறை புரட்டி பார்க்கலாம்.
தோனி தனது கிரிக்கெட் பயணத்தை பள்ளி அணிகளில் விளையாடுவதன் மூலம் தொடங்கினார். ஆரம்பத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய அவர், பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளர் கேசவ் பானர்ஜியின் ஊக்குவிப்பால் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.
தொடர்ந்து விளையாடிய அவர் முதல் தர கிரிக்கெட்டில் 1999-2000ல் பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பெற்றார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக 2004-ம் ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 2005ம் ஆண்டும், டி20யில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2006-ம் ஆண்டும் இந்திய அணியில் தோனி அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து 2007ல் இந்திய T20 அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 2008 முதல் 2014 வரை டெஸ்ட் அணியையும், 2007 முதல் 2016 வரை ஒருநாள் அணியையும் வழிநடத்தினார்.
உலக கோப்பை வெற்றிகள்: தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு இந்தியா முதல் T20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.
1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணிக்கு பிறகு அதுவும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.
2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பின்பு ICC-யின் மூன்று முக்கிய கோப்பைகளையும் (T20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராஃபி) வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார்.
டெஸ்ட் முதலிடம்: 2009ல் இந்திய டெஸ்ட் அணியை ICC தரவரிசையில் முதலிடத்திற்கு அழைத்துச் சென்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): 2008 முதல் CSK அணியின் கேப்டனாக இருந்து, அணியை 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியனாக்கினார். தோனியின் தலைமை மற்றும் ரசிகர் ஆதரவால் CSK உலகளவில் மிகவும் பிரபலமான IPL அணிகளில் ஒன்றாக உள்ளது.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்: பத்ம ஸ்ரீ (2009), பத்ம பூஷண் (2018) , ராஜீவ் காந்தி கேல் ரத்னா (2007-08), ICC ஒருநாள் வீரர் விருது (2008, 2009) ஆகிய விருதுகளை தோனி வென்றுள்ளார்.
திருமண வாழ்க்கை: தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி – சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
தனிப்பட்ட விருப்பங்கள்: கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக தோனிக்கு மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களின் மீது தீவிர ஆர்வம் உள்ளது. இதன் காரணமாக அவர் தனது வீட்டில் நிறைய கார் மற்றும் பைக்குகளை சேகரித்து வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் தோனியின் தாக்கம்: தோனி இந்திய கிரிக்கெட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். சிறிய நகரத்தில் பிறந்து, தனது திறமை மற்றும் உழைப்பால் உலகளவில் புகழ் பெற்றார். அவரது அமைதியான தலைமை, முடிவெடுக்கும் திறன் மற்றும் எளிமையான பண்பு இளைஞர்களுக்கு உத்வேகமாக உள்ளது.