சென்னை:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது.
ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் அடித்து கொண்டிருந்த நிலையில்,போட்டியை முன்கூட்டியே டிராவாக முடித்துக்கொள்ளலாம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை இந்திய கேப்டன் கில் மறுத்தார்.
இதையடுத்து தொடர்ந்து ஆடிய ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து இந்திய அணி போட்டியை முன்கூட்டியே முடித்துக்கொள்ள ஒப்பு கொண்டது.
இந்நிலையில் இது குறித்து பேசிய கேப்டன் கில், “4வது டெஸ்டில் எங்கள் வீரர்களின் பேட்டிங்கை நினைத்துப் பெருமை அடைகிறேன். களத்தில் எவ்வளவு நேரம் நீடித்து ஆட முடியுமோ அவ்வளவு நேரம் ஆடிவிட வேண்டும் என நினைத்தோம்.
ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது ஆட்டம் சதத்திற்கு தகுதியானது என நினைத்தோம். எனவே ஆட்டத்தை சீக்கிரமாக முடிக்க ஒப்புக்கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.