ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றி !! விராட் கோலி வாழ்த்து!!

மும்பை,
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலிய அணியின் லிட்ச்பீல்ட் வெறும் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார் அடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா (10 ரன்), ஸ்மிர்தி மந்தனா (24 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

3-வது விக்கெட்டுக்கு ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ரன்ரேட்டை 6-க்கு குறையாமல் நகர்த்தினர்.

வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்ட இந்த ஜோடி ஸ்கோர் 226-ஐ எட்டிய போது பிரிந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களில் (88 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தீப்தி ஷர்மா 24 ரன்னில் ரன்-அவுட் ஆனார். இதற்கிடையே ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்தார்.

மறுமுனையில் அட்டகாசமாக ஆடிய ஜெமிமா அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார். இறுதியில் அமன்ஜோத் கவுரின் பவுண்டரியுடன் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது.

இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

ஒரு பெரிய ஆட்டத்தில் ஜெமிமாவின் சிறப்பான ஆட்டம். உண்மையான மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. அருமை இந்தியா. என தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *