மும்பை:
லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பான 5-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது.
கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட் முழுமையாக மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகளுக்கு 10-க்கு10 மதிப்பெண் கொடுப்பேன். இந்திய அணியின் சூப்பர்மேன்கள் கலக்கி விட்டனர். என்ன ஒரு அற்புதமான வெற்றி.
கங்குலி:-
இந்திய அணி மிகவும் அற்புதமாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கும், பயிற்சியாளர்கள் குழுவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் சிராஜ் இந்திய அணியை அவ்வளவு எளிதாக தோற்கவிடமாட்டார். ஓவல் டெஸ்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டனர்.
வீராட் கோலி:-
இந்திய அணியின் சிறந்த வெற்றி. சிராஜ், பிரசித் கிருஷ்ணாவின் மன உறுதியும், தொடர் முயற்சியும் இந்த அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்துள்ளது. அணிக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சிராஜுக்கு சிறப்பு பாராட்டு. அவரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனில் கும்ப்ளே:-
இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. என்ன ஒரு அருமையான டெஸ்ட் தொடர். அற்புதமாக ஆடிய 2 அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டனர் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.
புஜாரா:-
வரலாற்று வெற்றி. இந்திய அணியின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சுவாரசியமாக சென்ற இந்த தொடரில் சிறப்பான முடிவு கிடைத்து உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைப்போன்று சிறந்தது வேறு ஒன்றுமில்லை.
ஹர்பஜன் சிங்:-
முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசினார்கள். இந்திய அணிக்கு என்ன ஒரு சிறப்பான வெற்றி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
ரகானே:-
டெஸ்ட் கிரிக்கெட் இதைவிட சிறப்பானதாக இருக்க முடியாது. மிகவும் பரபரப்பான போட்டி. அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்.