சண்டிகர்:
பஞசாப் மாநிலம் சண்டிகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மனக்பூர் ஷெரீப் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி முறை தவறி திருமணம் செய்து கொண்டதாக எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இனி பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் ஜோடியினர் திருமணம் செய்ய தடை விதித்து கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யும் ஜோடி அந்த கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள பகுதிகளிலோ வசிக்க முடியாது.
அவர்களுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்தால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம தலைவர் தல்வீர் சிங் கூறும்போது, இது தண்டனை அல்ல. மரபுகள் மற்றும் மதிப்புகளை பாதுகாப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கை ஆகும். நாங்கள் காதல் திருமணத்தையோ, சட்டங்களையோ எதிர்க்கவில்லை, ஆனால் எங்கள் கிராமத்தில் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
கிராம கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.