கோவை,
கோவை, செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகலீல் தலைமை காவலர் பிரபாகரன், காக்கி பீட் அலுவலர் கனகராஜ், ஆகியோர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து 3 பேரையும் சோதனை செய்தபோது அவர்களிடம் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அது கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த விடுதி என தெரியவந்தது.
இதனை அடுத்து இவர்களுக்கு தங்க அனுமதி அளித்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். அதில், கல்லூரி மாணவர்களது சீனியர் மாணவர்கள் தங்களது நண்பர்கள் வருவார்கள் அவர்களை இரண்டு நாள் தங்க வைக்குமாறு கூறியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், விடுதியின் ஒரு அறையில், பட்டா கத்தி, வீச்சருவாள், ஸ்குரு டிரைவர் , பேனா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் அங்கு 2 கிலோ கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 3 பேரும் மதுரையைச் சேர்ந்த கருப்புசாமி (24), சந்தோஷ் குமார் (20), பிரவீன் (19) என தெரியவந்தது. கருப்புசாமி மீது கொலை முயற்சி, வீடு உடைத்து திருடுதல், வழிப்பறி ஆகிய 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. சந்தோஷ் குமார் மீது திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. பிரவீனுக்கு திருட்டு வழக்கு மற்றும் கொடுமையான ஆயுதம் வைத்து இருந்த வழக்கு உள்ளிட்டவை நிலவையில் உள்ளது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை ஆயுதங்களுடன் நள்ளிரவில் துரத்தியதும், அந்த மாணவர் தப்பி ஓடிய நிலையில் 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.
இதனையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.