அலாஸ்கா,
‘நேட்டோ’ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் நாடு இணைய முயற்சி மேற்கொண்டது.
அந்த கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து உண்டாகும் என ரஷியா கருதியது.
எனவே உக்ரைனுக்கு எதிராக கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா போரை தொடங்கியது.இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், உக்ரைன் – ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமுறை பேசினார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும் ரஷியா – உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இந்தநிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணததில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப் – ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதன்படி இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக புதின் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் தனி விமானத்தில் அலாஸ்கா சென்றார்.
அலாஸ்கா ராணுவ படை தளத்தில் வந்து இறங்கிய புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேரில் சென்று கைகுலுக்கி வரவேற்றார்.
பின்னர் இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போது ரஷியா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.
பின்னர் டிரம்ப் – புதின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புதின், “நமது இரு நாடுகளும் பொதுவான எதிரிகளுடன் எவ்வாறு போராட்டன என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். இந்த பாரம்பரியம் எதிர்காலத்தில் நமக்கு உதவும்.
உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன். பரஸ்பர ஒப்பந்தம் உக்ரைனின் அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “புதின் உடனான இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது. ஆனால் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் போர் நிறுத்த விவகாரம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இதுவரை நான் போனில் பேசவில்லை.
விரைவில் அவருடன் பேச திட்டமிட்டிக்கிறேன்” என்று தெரிவித்தார். புதின் – டிரம்ப் சந்தித்த நிலையில், வரும் திங்கள் கிழமை டிரம்பை சந்திக்க இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
புதினுடனான சந்திப்பின் போது பேசப்பட்டவைகள் குறித்து ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் பேசுவார் எனத்தெரிகிறது.