டெல்லி,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பணமோசடி புகார் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிவர்த்தை உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனிடையே, அதிமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மந்திரியாக செயல்பட்டார். அதேவேளை, கடந்த 2023 ஜுன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி வீடு, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனைக்குப்பின் அன்று இரவே சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட சில நாட்களில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.
அதேவேளை, செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அமைச்சர் பதவி அல்லது ஜாமீன் இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுமாறு செந்தில் பாலாஜியிடம் தெரிவித்தது. இதையடுத்து, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பணமோசடி தொடர்பான வழக்கில் கோர்ட்டு தீர்ப்பில் உள்ள சில கருத்துக்களை நீக்கி உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணையில் இருக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்கக்கூடாது என கூற முடியாது என வாதிட்டார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர் அமைச்சராக இருந்ததால் சாட்சியக்களை கலைக்க நேரிடும்.
அவர் அமைச்சராக இல்லாததை கருத்தில் கொண்டே ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் அமைச்சராவதை கோர்ட்டு தடுக்கவில்லை. கோர்ட்டு அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்.
ஆனால், அமைச்சராகும்போது சாட்சியங்களை கலைக்க முயற்சிப்பதாக புகார் வந்தால் , ஜாமீன் விதிமுறைகளை மீறினார் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்படும்.
செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றால் தனி மனுவாக தாக்கல் செய்து கோர்ட்டு அனுமதியுடன் அமைச்சராகலாம் என்றார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை உள்பட அனைத்து தரப்பும் பதில் அளிக்க உத்தவிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.