பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 333 ரன்களில் ஆல்-அவுட்!!

ராவல்பிண்டி,
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் லாகூரில் நடந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது.

அப்துல்லா ஷபீக் (57 ரன்), கேப்டன் ஷான் மசூத் (87 ரன்) அரைசதம் அடித்தனர். சாத் ஷகீல் 42 ரன்னுடனும், சல்மான் ஆஹா 10 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி கேஷவ் மகராஜின் சுழலில் சிக்கியது.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 113.4 ஓவர்களில் 333 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சல்மான் ஆஹா 45 ரன்னிலும், சாத் ஷகீல் 66 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் கேஷவ் மகராஜ் 7 விக்கெட்டும், சிமோன் ஹார்மர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ரையான் ரிக்கெல்டன் 14 ரன்னில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் அப்ரிடி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் சிக்கினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் மார்க்ரம் 32 ரன்னில் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் அந்த அணி 54 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் கைகோர்த்த டோனி டி ஜோர்ஜி – டிரிஸ்டான் ஸ்டப்ஸ் ஜோடி சிறப்பாக ஆடியது. சிறப்பாக ஆடிய இவர்கள் இருவரும் அரைசதத்தை கடந்ததுடன் அணியையும் சரிவில் இருந்து மீட்டனர்.

ஸ்கோர் 167 ரன்னை எட்டியபோது டோனி டி ஜோர்ஜி 55 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த டிவால்ட் பிரேவிஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 65 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.

டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 68 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி இன்னும் 148 ரன்கள் பின்தங்கி உள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *