கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தபோது, ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மரிசென்னே கெப் 43 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால் மற்றும் ஒமைமா சோஹைல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது.
ஆனால் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 20 ஓவர்களில் 234 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சித்ரா நவாஸ் 22 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசென்னே கெப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரே ஆட்ட நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.