கொல்கத்தா:
இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சைமன் ஹார்மர், கேசவ் மஹாராஜ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி இந்திய அணியை 93 ரன்களில் சுருட்டினர்.
டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களும், இந்திய அணி 189 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் பின்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை தென் ஆப்பிரிக்க அணி தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 3ம் நாள் ஆட்டத்தை கேப்டன் தெம்பா பவுமா 29 ரன்களும், கார்பின் போஷ் ஒரு ரன்னுடனும் தொடங்கினர். இருவரும் நிதானத்துடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர். கார்பின் போஷ் 37 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் போல்டானார்.
இதைத் தொடர்ந்து விளையாட வந்த சைமன் ஹார்மர் 7 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் வீழ்ந்தார். கேசவ் மஹாராஜ் ரன் கணக்கை தொடங்காமலேயே சிராஜ் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் தெம்பா பவுமா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 54 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்க அணி.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4, குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் தலா 2, பும்ரா, அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸை தொடங்கியது.
கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கவில்லை. இதனால் தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் களம்புகுந்தனர். முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரன் கணக்கை தொடங்காமலேயே ஜெய்ஸ்வால், மார்கோ யான்சன் பந்தில் வீழ்ந்தார். 3-வது ஓவரில் கே.எல்.ராகுலும், மார்கோ யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், துருவ் ஜூரெலும் நிதானமாக விளையாடத் தொடங்கினர்.
ஆனால் இந்த ஜோடியை ஹார்மர் பிரித்தார். துருவ் ஜூரெல் 34 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த ரிஷப் பந்த், அதிரடியாக விளையாட முயன்று ஹார்மர் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
அதன் பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் அவர் 26 பந்துகளில் 18 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 92 பந்துகளில் 31 ரன்களும் சேர்த்து வீழ்ந்தனர்.
கடைசி நம்பிக்கையாக இருந்த அக்சர் படேல் 26 ரன்களில், கேசவ் மஹாராஜ் பந்தில் ஆட்டமிழந்ததும் இந்திய அணி நம்பிக்கை தளர்ந்தது. சிராஜ் 0, குல்தீப் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். பும்ரா ரன் கணக்கைத் தொடங்காமலும், ஆட்டமிழக்காமலும் இருந்தார்.
ஷுப்மன் கில் காயமடைந்துள்ளதால் களமிறங்கவில்லை. இதையடுத்து 35 ஓவர்களில் 93 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட்களையும், கேசவ் மஹாராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். மார்கோ யான்சன் 2, எய்டன் மார்க்ரம் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக சைமன் ஹார்மர் தேர்வு செய்யப்பட்டார்.
2-வது டெஸ்ட்: இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி குவாஹாட்டியிலுள்ள பர்ஸாபரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 30-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரும், டிசம்பர் 9ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரும் நடைபெறவுள்ளன.
மோசமான தோல்வி: இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 124 ரன்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த குறைந்த இலக்கைக் கூட வெற்றிகரமாக துரத்த முடியாமல் 93 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்த வகையில் இந்திய அணிக்கு இது 2-வது மோசமான தோல்வியாகும்.
இதற்கு முன்பு 1997-ல் பிரிட்ஜ்டவுனில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இந்திய அணி 120 ரன்களை துரத்த முடியாமல் ஆட்டமிழந்திருந்தது. அதேபோல் 2024-ல் நியூஸிலாந்துக்கு எதிராக வான்கடே மைதானத்தில் 147 இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது. 2015-ல் காலேயில் இலங்கைக்கு எதிராக 176 இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்தது.
அதே நேரத்தில் குறைந்த வெற்றி இலக்கை நிர்ணயித்து அதற்குள்ளாகவே எதிரணியை சுருட்டிய சாதனையை தென் ஆப்பிரிக்க அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு 1994-ல் ஆஸ்திரேலியாவுக்கு 117 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து அதற்குள்ளாக அந்த அணியை தென் ஆப்பிரிக்கா சுருட்டியுள்ளது. இந்த வரிசையில் கொல்கத்தா டெஸ்ட் போட்டி 2-வது இடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு 1997-ல் பாகிஸ்தானுக்கு எதிராக பைசலாபாத்தில் 146 இலக்கு நிர்ணயித்து அதற்குள் பாகிஸ்தானை சுருட்டியது தென் ஆப்பிரிக்க அணி. 2000-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக கண்டியில் 177 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்து அதற்குள் இலங்கை அணியை தென் ஆப்பிரிக்கா சுருட்டியது.
8 விக்கெட்கள்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் சைமன் ஹார்மர் 8 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ள ஹார்மர் மொத்தம் 18 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதற்கு முன்பு 2015-ல் மொஹாலி, நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் ஹார்மர். இந்தப் பட்டியலில் 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பால் ஆடம்ஸ், இம்ரான் தாஹிர் (இருவரும் தலா 14 விக்கெட்கள்) உள்ளனர்.
மோசமான ஃபார்மில் சிக்கிய ஜெய்ஸ்வால்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மோசமான ஃபார்மில் சிக்கித் தவித்து வருகிறார் இந்திய வீரர் ஜெய்ஸ்வால். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 12 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 0 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டிகளில் அவரது ஸ்கோர் 17, 5, 0, 28 என இருந்துள்ளது.
பவுமா 26-வது அரை சதம்: 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க கேப்டன் தெம்பா பவுமா 55 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் விளாசும் 26-வது அரை சதமாகும் இது. மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் விளாசப்பட்ட ஒரே அரை சதம் இதுதான்.