கொல்கத்தா:
கொல்கத்தா மைதானம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செய்தியாளர்களிடம் கவுதம் கம்பீர் கூறியதாவது:
”முதல் டெஸ்ட் போட்டிக்கான கொல்கத்தா மைதான ஆடுகளம் விளையாட முடியாத அளவுக்கு கடினமான ஆடுகளம் இல்லை.
இந்த மாதிரியான ஆடுகளத்தையே நாங்கள் கேட்டிருந்தோம். இது போன்ற மைதானத்தைத் தயாரித்துத் தருமாறு ஆடுகள பராமரிப்பாளரிடம் கேட்டிருந்தோம்.
அவர் எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். இந்த ஆடுகளம் வீரர்களின் மன உறுதியை சோதிக்கும் விதமாக இருந்தது. நன்றாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் இந்த ஆடுகளத்தில் ரன்கள் குவித்துள்ளனர். நாங்கள் இந்த மாதிரியான ஆடுகளத்தைத் தான் எதிர்பார்த்தோம்.
இது மோசமான ஆடுகளம் இல்லை. அக்சர் படேல், தெம்பா பவுமா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த ஆடுகளத்தில் நன்றாக விளையாடி ரன்கள் குவித்துள்ளனர்.
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் முதல் இன்னிங்ஸில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியது வேகப்பந்து வீச்சாளர்கள் தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் உதவும் விதமாக இருக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதனால், எந்த அணி, டாஸ் வெல்கிறது என்பது முக்கியமான விஷயமாக இருக்கவில்லை.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றிருந்தால், ஆடுகளம் குறித்து இத்தனை கேள்விகள் இருந்திருக்காது. எந்த ஒரு ஆடுகளத்திலும், எந்த ஒரு சூழலிலும் விளையாடுவதற்கு எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.
15 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றி: தென் ஆப்பிரிக்க அணி சாதனை – இந்திய மண்ணில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி சாதனை படைத்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்த போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி கடைசியாக 2010-ம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
அதன் பின்னர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 தோல்விகளையும், ஒரு டிராவையும் கண்டது. இந்த 15 ஆண்டு காலத்தில் ஒரு போட்டியில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் தற்போதைய வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சாதனை படைத்துள்ளது.