ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கால் சேலம் -கோவை பைபாஸ் பாலத்திற்கு அடியில் கடந்த மாதம் 16ஆம் தேதி பெற்றோருடன் படுத்து தூங்கிய ஒன்றரை வயது குழந்தை வந்தனா கடத்தல் தொடர்பாக குழந்தையின் தாய் கீர்த்தனா, தந்தை வெங்கடேசன் ஆகியோர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பவானி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10-ந் தேதி மேற்படி பெண் குழந்தையை பொள்ளாச்சி இட்டேரி ஜெஜெ நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 33) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.
அதன் பேரில் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய போது கடத்தப்பட்ட பெண் குழந்தை நாமக்கல் மாவட்டத்தில் ரமேஷின் உறவுக்கார பெண்ணிடம் இருப்பது தெரியவந்தது.
அதன் பேரில் மேற்படி தனிப்படையினர் நாமக்கல் மாவட்டம் சென்று பெண் குழந்தையை மீட்டனர். ரமேஷ் மற்றும் பெண் குழந்தையை வைத்திருந்த உறவுக்கார பெண் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.