கோவை,
கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 34 பேருக்கு ரூ.14.55 லட்சத்தில் அரசின் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற 11 பேருக்கு ரூ.3.28 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து இலவச வீடு வேண்டி 59 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா வேண்டி 186 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 1 மனுக்களும், 174 இதர மனுக்கள் என மொத்தம் 420 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர் களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பேருக்கு தலா ரூ.6700 மதிப்பில் விலையில்லா திரவ எரிப்பொருள் தேய்ப்புப் பெட்டிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.5800 மதிப்பில் விலையில்லா பித்தளை தேய்ப்புப் பெட்டியினையும், 5 பேருக்கு ரூ.6100 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் சமூக பொருளாதாரக் கடனுதவி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.65 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி என மொத்தம் 11 பேருக்கு ரூ.3.28 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தாட்கோ பொது மேலாளர் ரஞ்சித்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்
நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 538 மனுக்கள் பெறப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சரணவன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 6 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் மதிப்பில் தொழில்முறை டாக்சி வாகனம் மற்றும் ஆட்டோ மானியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 11 பேருக்கு ரூ.63,801 மதிப்பில் காதொலி கருவி மற்றும் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் என 17 பேருக்கு ரூ.6.64 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சுந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 399 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, கலெக்டர், தொழிலாளர் நலத்துறை (ச.பா.தி) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் 6 பேருக்கு ரூ.4 லட்சத்து 63 ஆயிரத்து 600 மதிப்பில் விபத்து மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் ஓய்வுதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.