“மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் வரும் வரை அனைவரும் களத்தில் தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும்” – திமுக மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

சென்னை:
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ‘என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச் சாவடி’ என்ற தலைப்பில் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.

இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:

தமிழக மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

அதேநேரம் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து, மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் வரும் வரை அனைவரும் களத்தில் தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும்.

எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழகத்தை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான். நமது அரசின் திட்டங்களின் மூலம், 1.86 கோடி மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர்.

நமது சிறப்பான பணிகளை பார்த்து நடுநிலை வாக்காளர்களும் இன்று ஆதரவாக நிற்கின்றனர். மொத்தமாக, பயனாளிகள்-திமுகவினர்-நடுநிலை வாக்காளர்கள் என சேர்த்தால், 2.5 கோடி வாக்குகளை தாண்டுவது சாத்தியமே.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2.09 கோடியாகும். இம்முறை அதைவிட கூடுதலாக வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி.

இத்தனை சாதகமான சூழல்கள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. சிபிஐ, ஈடி, ஐடி, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள். அவற்றை எதிர்கொள்ள நமது பலத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.

வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் வீடு வீடாகச் சென்று விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்க்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும்,அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். ஒரு வாக்குச்சாவடியை வென்றால், ஒரு தொகுதியை வெல்லலாம். எனவே, இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியும் முக்கியமானது.

உங்கள் வாக்குச்சாவடியில் வெற்றி பெறும் பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறேன். என் நம்பிக்கையை காப்பாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *