19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
கடைசி நேரத்தில் மேலும் 19 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.
ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.125 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்க வைத்த வீரர்களுக்கான ஊதியம் போக மீதி தொகையை கொண்டு தான் மற்ற வீரர்களை வாங்க முடியும்.
அந்த வகையில் அதிகபட்சமாக முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 64.3 கோடி கையிருப்பு வைத்துள்ளது. அந்த அணி 13 வீரர்களை வாங்க வேண்டி உள்ளது.
5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சிடம் 43.4 கோடி இருப்பு இருக்கிறது. அவர்களுக்கு 4 வெளிநாட்டவர் உள்பட 9 வீரர்கள் தேவை. மும்பை இந்தியன்சிடம் குறைந்த தொகையாக ரூ.2½ கோடி மட்டுமே உள்ளது. 20 வீரர்களை தக்க வைத்துள்ள அந்த அணி இன்னும் 5 வீரர்களை எடுக்கலாம். ஒவ்வொரு அணியிலும் குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை இடம் பெறலாம்.
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், ஜேக் பிராசர் மெக்குர்க், இந்தியாவின் வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோருக்கு கடும் கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.
தமிழக வீரர்கள் சஞ்சய் யாதவ், இசக்கி முத்து, சோனு யாதவ், முகமது அலி உள்பட 10 பேர் ஏலத்தில் இடம் பிடித்துள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர் (திரிபுரா அணி), முருகன் அஸ்வின் (ஜம்மு-காஷ்மீர்) ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தற்போது வேறு மாநில அணிக்காக விளையாடி வருகிறார்கள். அவர்கள் அந்த மாநில கிரிக்கெட் சங்கங்களின் மூலம் ஏலத்திற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மினி ஏலம் தற்போது தொடங்கியுள்ளது. ஏலத்தை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகிறார். இதில் முதல் வீரராக வந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்கை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை.
இதனையடுத்து வந்த டேவிட் மில்லரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு டேல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.