பயங்கரவாதியை விடுவிக்க ரூ133 கோடி பெற்றார்… கெஜ்ரிவால் மீது காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் பரபரப்பு குற்றச்சாட்டு…

டெல்லி;

நீதிக்கான சீக்கியர்கள் என்ற காலிஸ்தான் அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் குர்பத்வந்த் சிங் பன்னுன், தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனால் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வேளான வீடியோக்களில், 2014 – 2022 இடையே கட்சி நிதி என்ற பெயரில் ஆம் ஆத்மிக்கு காலிஸ்தான் குழுக்கள் வசமிருந்து 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (சுமார் ரூ133.54 கோடி) நிதியுதவியை கேஜ்ரிவால் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பதில் உதவியாக சிறையில் இருக்கும் தேவிந்தர்பால் சிங் புல்லர் என்னும் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியை விடுவிக்க உதவுவதாக கேஜ்ரிவால் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் பன்னூன் தெரிவித்தார். டெல்லியில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேவிந்தர்பால் சிங் புல்லர் முக்கிய குற்றவாளி ஆவார். இந்த டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர்; 31 பேர் காயமடைந்தனர்.

கேஜ்ரிவால் மற்றும் காலிஸ்தானி தலைவர்கள் இடையிலான சந்திப்பு 2014-ல் நியூயார்க்கில் நடைபெற்றதாக பன்னூன் தெரிவித்திருக்கிறார். அப்போது பதவியில் இல்லாத கேஜ்ரிவால், டெல்லியில் பதவியேற்ற 5 மணி நேரத்தில் புல்லர் விடுதலைக்கான ஏற்பாடுகளில் இறங்குவதாக உறுதி அளித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் குண்டுவைப்போம் என முன்னதாக இந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவின் உளவுத்துறைக்கு எதிராக கனடா அரசு குற்றம்சாட்டியது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற பன்னூனை இந்திய உளவுத்துறை ஏஜெண்டுகள் கொல்ல முயற்சிப்பதாக அமெரிக்காவும் குற்றம்சாட்டியது.

இந்த சூழலில் கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி பெரும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இண்டியா கூட்டணி சார்பிலும் மார்ச் 31 கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.

தேர்தல் பத்திர மோசடி விவகாரத்தை திசை திருப்பவே கேஜ்ரிவால் கைதை வைத்து ஆளும் பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பன்னூன் வீடியோ பேச்சானது இந்தியா கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *