நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் ஊரணிக்கரையில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறும்.
அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது. இதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.
பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வேட்டைக்காரனுக்கு பலியிடப்பட்டது. அதன்பின் நள்ளிரவு முழுவதும் பக்தர்களால் ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.
பின்னர் இன்று காலை சுவாமிக்கு அந்த உணவு படையல் போடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து நீண்ட வரிசையில் கூடியிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.