பக்தி பரவசத்தில் பண்ணாரி மாரியம்மன்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்ற ஊரில் உள்ளது, பண்ணாரி அம்மன் கோவில். ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியில் அமைந்த மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இது பார்க்கப்படுகிறது. இங்கு பண்ணாரி அம்மன், சுயம்புவாக லிங்க வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பண்ணாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை இருக்கிறாள். பொதுவாக அம்மன் ஆலயங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயம் தெற்கு நோக்கி உள்ளது.

தல வரலாறு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக, இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது. அப்போது இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இப்பகுதியில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். தோரணப்பள்ளம் என்ற அந்தக் காட்டாறு, இவ்வாலயம் அமைந்த இடத்திற்கு மேற்கு புறத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பலரும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக இந்த வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அவர்கள் வனப்பகுதியிலேயே மாடுகளுக்கு பட்டிகளை அமைத்திருந்தனர். காலையில் அந்த வனத்திற்குள் மாடுகளை மேய விட்டு விட்டு, மாலையில் பட்டியில் அடைத்து, தாங்களும் அங்கேயே தங்கிக்கொள்வார்கள். அதோடு காலையிலும், மாலையிலும் பசுக்களிடம் இருந்து பாலைக் கறந்து, அதன் உரிமையாளர்களிடம் சேர்த்துவிடுவர். அப்போது ஒரு பட்டியில் இருந்த காராம்பசு ஒன்று, பால் கறப்பதற்குச் சென்றால், பால் சுரக்காமலும், தன்னுடைய கன்றுக்கும் கொடுக்காமலும் இருப்பதை அந்தப் பட்டியை பராமரிப்பவன் அறிந்தான்.

அவன் மறுநாள் அந்த காராம் பசுவை பின் தொடர்ந்தான். அந்தப் பசுவானது, ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலை தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான். இந்நிகழ்வைக் கண்ட அவன் மறுநாள் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் நடந்ததைப் பற்றி விவரித்தான். அவர்கள் மறுநாள், பசுவை பின் தொடர்ந்து

குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு அதே இடத்தில் பசு தன்னுடைய பாலை தானாக சுரப்பதை அனைவரும் கண்டனர். இந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பசு அங்கிருந்து அகன்றதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் இருந்த கணாங்கு புற்களை அகற்றியபோது, அங்கே வேங்கை மரத்தின் அடியில் ஒரு புற்றும், அதன் அருகில் சுயம்பு லிங்க திருவுருவமும் இருப்பதைக் கண்டனர்.

அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் அருள் வந்து, தெய்வ வாக்கை கூறினார். “நான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரில் இருந்து பொதி மாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன். இங்கு காணப்படும் எழில் மிகுந்த இயற்கைச் சூழலில் லயித்து, இங்கேயே தங்கி விட்டேன். என்னை பண்ணாரி மாரியம்மன் என்ற பெயரில் போற்றி வழிபடுங்கள்” என்றார்.

பின்னர் அன்னையின் அருள்வாக்குப்படி அந்த இடத்திலேயே கணாங்கு புற்களைக் கொண்டு ஒரு குடில் அமைத்து, கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அம்மனை வழிபாடு செய்து வந்தனர். பின்பு ஊர் மக்களும், பண வசதி படைத்தவர்களும் கூடிப் பேசி, அம்மனுக்கு விமானத்துடன் கூடிய கோவிலை அமைத்தனர். அந்த ஆலயத்தில் பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு செய்யத் தொடங்கினர்.

தற்போதைய பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், அழகிய கோபுரத்துடனும், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றுடன் அழகிய சிற்பங்களைக் கொண்டு கண்கவர் ஆலயமாக பொழிவுடன் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா’ புகழ்பெற்றது. இந்த ஆலயத்தில் விபூதி பிரசாதம் கிடையாது. அதற்கு பதிலாக புற்று மண்தான், விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அம்மை நோய் பாதிப்பு உள்ளவர்கள், குழந்தை வரம், வேலைவாய்ப்பு வேண்டுவோர் வழிபடக்கூடிய முக்கிய ஆலயமாக இந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கிச் சென்று, அம்மை நோய் பாதித்தவர்களின் மீது வைத்தால், அம்மை நோய் நீங்கும் என்கிறார்கள். திருமண பாக்கியம் கைகூடாதவர்கள், கை- கால் உறுப்பு குறைபாடு உள்ளவர்கள், விவசாயம் செழிக்க வேண்டுவோர், இவ்வாலய அம்மனை வேண்டிக்கொண்டால் பிரார்த்தனை கைகூடும்.

இவ்வாலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்கள், உருவத்தகடுகள் (கை, கால், கண்) வாங்கி, அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகிறார்கள். மேலும் அக்னி குண்டம் இறங்குதல், வேல் எடுத்து சுத்துதல், கிடா வெட்டுதல், அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக, ஆராதனைகள் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அக்னி குண்டம் இறங்கும் விழா

இவ்வாலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் விழா, மிகவும் பிரசித்திப்பெற்றது. அக்னி குண்டம் ஏற்படுத்துவதற்காக பக்தர்கள் காட்டிற்குச் சென்று மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்பார்கள்) எடுத்து வந்து, மலைபோல் குவித்து, அதனை எரித்து 8 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக தயார் செய்வார்கள். அந்த குண்டத்தில் முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார்.

பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், நடை சாற்றும் வரை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கிக் கொண்டே இருப்பார்கள். பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்ததும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.

அமைவிடம்

சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி திருத்தலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து 77 கிலோமீட்டர், கோவையில் இருந்து 82 கிலோமீட்டர், திருப்பூரில் இருந்து 65 கிலோமீட்டர், சேலத்தில் இருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் இருக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *