ஒரே நாளில் முதல்வரும் எடப்பாடி பழனிச்சாமியும் தேர்தல் பிரச்சாரம்..!

லோக்சபா தேர்தலில் திமுக – அதிமுக பிரச்சாரக் கூட்டங்களில் அனல் பறக்கிறது. மத்திய அரசை சாடும் அதே வேளையில் அதிமுகவையும் ஒரு கை பார்த்து வருகிறார்கள் திமுக தலைவர்கள். குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அனல் பறக்க கேள்வி கேட்கிறார்கள். பாஜகவையும், அதிமுகவையும் சேர்த்து வைத்தே விமர்சிக்கிறார்கள்.

மறுபக்கம், திமுகவை நோக்கி சரமாரியாக நேரடியாக பல கேள்விகளைக் கேட்டுத் திணறடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஒற்றை செங்கல்லை மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறீர்களே.. அதைக் கொண்டு போய் நாடாளுமன்றத்தில் காட்டி நாடாளுமன்றத்தை முடக்கியிருக்கலாமே.. அதை ஏன் திமுக செய்யலை என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்பதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்குப் பதிலடி கொடுத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நானாவது கல்லைக் காட்டினார்.. அவர் எதைக் காட்டினார் பாருங்க.. பல்லைக் காட்டியிருக்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்தை நேற்றுதான் வைத்துள்ளார் உதயநிதி. அதற்கு இன்று தூத்துக்குடியில் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று தூத்துக்குடியில் ஒரே நாளில் பிரச்சாரம் செய்யவுள்ளனர். இதனால் எந்தவிதமான பிரச்சனைகளும் உருவாகாமல் தடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் தற்போது பிரச்சாரம் வேகம் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தூத்துக்குடி தொகுதியில் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

தூத்துக்குடியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். இங்கு அதிமுகவும் போட்டியிடுகிறது, பாஜக கூட்டணியும் போட்டியில் உள்ளது. நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இன்று மாலை 5 மணியளவில் எட்டயபுரம் அருகே கனிமொழியை ஆதரித்தும், அதேபோல் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்தும் முதல்வர் மு க ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் விருதுநகர் புறப்பட்டு செல்வார்.

அதேபோல அதிமுக சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடும் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். முதல்வரும், முன்னாள் முதல்வரும் ஒரே நாளில் அருகருகே பிரச்சாரம் செய்ய இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *