நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 16ம் தேதி அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
அதன்படி பொதுமக்கள் ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணம் எடுத்துச் செல்ல கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, கடந்த 16ம் தேதி மாலையில் இருந்து 31ம் தேதி (நேற்று) வரை தமிழகத்தில் சரியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக சுமார் ரூ.110 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
அதன்படி ரொக்கத்தொகை ரூ.48.61 கோடி, மதுபானம் ரூ.3.06 கோடி, தங்கம், வெள்ளி நகைகள் ரூ.47.53 கோடி, போதை பொருட்கள் ரூ.67 லட்சம் மற்றும் வருமான வரித்துறையினர் சுமார் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.109.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.