கரூர்:
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள நெரூர் அரங்கநாதன்பேட்டையில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார வாகனங்களுக்கு பின்னால் கண்காணிப்பு குழுவினர் சென்றனர்.
இந்த வேளையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ்குமார், மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.