மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதற்கு துணை போன பாமக, அதிமுக கட்சிகளை வீழ்த்துங்கள் – விளாசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
மோடி ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்கூட கொடுக்க மாட்டேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்த ராமதாஸ் , இன்று பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இவர் திமுக கூட்டணி கட்சி விழுப்புரம் மக்களவை தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் , காங்கிரஸ் வேட்பாளர் கடலூர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், நாட்டை நிர்வகிக்கும் மத்திய அரசு செயலர்களின் மூன்று சதவீதம் கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இல்லை. பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் இடஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படுவதில்லை.
சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு . மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு என்பது இருக்காது .சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஒன்றியத்தில் இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வரவேற்பை பெற்றுள்ளது. பாஜக இது போன்று தேர்தல் வாக்குறுதி அளிக்குமா?
சாதிவாரி கணக்கெடுப்புக்கு முட்டுக்கட்டை போடும் பாஜகவுடன் சேர்ந்து பிரதமரை புகழ்கிறார் ராமதாஸ். சில நாட்களுக்கு முன்பு மோடி ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பின் கூட கொடுக்க மாட்டேன் என்ற செய்தியாளர்களின் தெரிவித்த ராமதாஸ் இன்று பாஜகோடு கூட்டணி வைத்து இருக்கிறார். அவரது சந்தர்ப்பவாதம் யாருக்கும் தெரியாது என்று அவர் நினைக்கிறார்.
அதிமுக அழுத்ததால்தான் மகளிர் உரிமை தொகை கொடுப்பதாக பழனிசாமி பேசி வருகிறார். இந்த திட்டத்தை நிறைவேற்றவே மாட்டார்கள் என்றவர் , தற்போது வெட்கமில்லாமல் இப்படி பேசுகிறார் . மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதற்கு துணை போன பாமக, அதிமுக கட்சிகளை வீழ்த்துங்கள் என்றார்.