தமிழகத்தில் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி இந்த தேர்தல் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் – அண்ணாமலை..!

கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியுள்ளது ‘நரி அந்த திராட்சை பழம் புளிக்கிறது’ என்பதைப் போல் உள்ளது. இபிஎஸ் ரோடு ஷோ செல்ல சொல்லுங்கள், அதில் எத்தனை பேர் வருவார்கள். அவர்கள் வீதியில் வந்தால் மக்கள் யாரும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. அரசியல் கட்சிக் கூட்டங்கள் தமிழகத்தில் எப்படி நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதிமுக தலைவர்கள் வீதிக்கு வந்து மக்களைப் பார்க்கச் சொல்லுங்கள், எத்தனை பேர் அவர்களுக்காக வருவார்கள் என்பது தெரியும். மோடி நடத்திய ரோடு ஷோவை இபிஎஸ் நடத்த வேண்டியதுதானே?. அப்படி நடத்தினால் மக்கள் வரமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக – பாஜக இடையே தான் போட்டி. இரண்டு கட்சிகள் தற்போது ஆட்சியில் உள்ளன. அப்படி என்றால் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே தானே போட்டி. களத்தில் யார் போட்டியாளர்களாக இருக்கிறார்களோ அவர்கள் செய்கிற தவறை தான் சொல்ல முடியும். அதனால்தான் பிரதமர் மோடி மேடைகளில் திமுகவை மட்டும் பேசி அதிமுகவைப் பற்றி பேசவில்லை.

பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்கிறார் அமைச்சர் டிஆர்பி ராஜா. அவரின் தந்தை டிஆர். பாலு தான் முதல் சமூக விரோதி. சாராயம் விற்பவர்கள் சமூக விரோதிகள் தானே. அப்படியெனில் டிஆர். பாலு சமூக விரோதிதான். சமூக விரோதியின் பையனாக இருந்துகொண்டு டிஆர்பி ராஜா இப்படி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. தனது தந்தை சாராயம் விற்கவில்லை என டிஆர்பி ராஜா எனக் கூறட்டும், அவருக்கு நான் பதில் கூறுகிறேன். எதற்காக டிஆர். பாலு தஞ்சாவூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

பிரதமர் மோடியிடம் கேரண்டி கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். நிச்சயமாக 2024 தேர்தலுக்குப் பிறகு கோபாலபுரத்தில் ஊழல் குடும்பத்தினர் சிறையில் இருப்பார்கள் என்பதற்கு மோடி கேரண்டி கொடுப்பார். தமிழகத்தின் 8 கோடி மக்களும் திமுக என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதற்கும் மோடி கேரண்டி கொடுப்பார்.

திமுக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள தனது தேர்தல் விளம்பரத்துக்கு மட்டும் ரூ.7 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. தேர்தல் விளம்பரங்களை செய்துள்ள இந்த கம்பெனியின் பெரும் பங்கு ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயரில் உள்ளது. இப்படி ஒரே குடும்பம் அனைத்தையும் ஆள்வதை தடுப்பதை பிரதமர் மோடி கேரண்டியாக கொடுப்பார்.

ஸ்டாலின் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் கனவுக்கு எல்லாம் கேரண்டி கொடுக்க முடியாது. தமிழகத்தில் பட்டியலின மக்களை இரண்டாம்தர குடிமக்களாக ஸ்டாலின் நடத்தவில்லையா. அவர்களுக்கு ஸ்டாலினால் கேரண்டி கொடுக்க முடியுமா என்றால் முடியாது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி இந்த தேர்தல் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

பாஜக உள்ளே வந்தால் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று 60 ஆண்டுகளாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். உதாரணத்துக்கு உதயநிதி மாமன்னன் என்று படம் எடுப்பார். அதில் இரண்டு ஊர் இருக்கும். தெற்கு ஊரில் இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள். வடக்கு ஊரில் இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள். அப்புறம் கெட்டவர்கள் ‘ஜி’ என்று பேசுவார்கள். இப்படி அரைத்த மாவையே அரைக்கிறார்கள். நான் அந்தப் படத்தை பார்க்கவில்லை. பார்த்தவர்கள் சொன்னார்கள்.

இப்படி உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் சுக்குநூறாக உடைந்து வருகிறது. தேர்தலுக்கு பின் முற்றிலுமாக அது அகற்றப்படும். திமுகவில் வாரிசுகளுக்கு தான் வாய்ப்பளிக்கப்படுகிறது. அவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் ஜூன் 4-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெல்லும்.

ஜூன் 4ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்துவிடலாம். ஊழல் பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக மோடி இருப்பார் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். நான் சொல்கிறேன், ஊழல் பல்கலைக்கழகத்துக்கு பெயரே ஸ்டாலின் என்றுதான் இருக்கும். ஊழல் பல்கலைக்கழகத்துக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தால் அதற்கு வேந்தராக மோடி இருப்பார். பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை வேந்தர்கள்தான் வெளிக்கொண்டு வருவார்கள்.

பண அரசியலை கோயம்புத்தூரில் இருந்து ஒழிக்க முடியும் என்பது என்னுடைய தீர்க்கமான நம்பிக்கை. கோயம்புத்தூர் மக்கள் தமிழகத்துக்கு வழிகாட்டுவார்கள். பண அரசியல் என்ற பேயை ஓட்ட கோவை மக்கள் கையில் வேப்பிலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். கோயம்புத்தூரில் இதை நான் செய்து காண்பிக்கிறேன்.” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *