மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,
மக்களுக்கு முன்பாக வாக்குறுதி கொடுப்பதற்கு தைரியம் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளாக, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி மக்களுக்கு தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வீதம், 2020 முதல் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரின் முன்னேற்றத்திற்காகவும் பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார்.
திமுக, காங்கிரசின் தோழமைக் கட்சியாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்திற்கு ஒன்றையும் செய்யவில்லை. இவர்கள் ஊழலுக்குப் பெயர் போனவர்கள். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், வங்கிக் கடன் வழங்கியதில் ஊழல் என 10 வருடத்தை ஓட்டினார்கள்.
இவர்களின் ஆட்சிக் காலத்தில் நாடு நிலை குலைந்து போய்விட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி மீட்டுள்ளார். இப்போது இந்தியாவின் 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த 2 வருடங்களில் மூன்றாவது இடத்திற்குச் செல்லும்.
மக்கள் மீது வரியைச் சுமத்தாமல், ஊழலை எதிர்த்து பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலக அளவில் 100 நிறுவனம் இருந்தால், அதில் 50 நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
பாதுகாப்பு எக்ஸ்போ சென்னையில் நடத்திய பெருமை பிரதமர் மோடியைச் சேரும். இதன் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உற்பத்தி பொருட்களைச் செய்து விற்பனை செய்கிறார்கள்.
தமிழகத்தில் மக்கள் பணிகளைச் செய்ய திமுகவிற்கு நேரமில்லை. ஆனால் போதைப் பொருட்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. இப்படி இளைஞர்களை ஏமாற்றி போதையில் சிக்க வைக்கிறார்கள். இது திமுக ஆதரவோடு செய்யப்படுகிறது.
இந்த தில்லை நடராஜர் ஆலயத்தின் அருகில் இருந்து சொல்கிறேன். போதைப்பொருட்கள் மூலமாக, மக்களை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள். இந்த தேர்தலில் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று யோசித்து வையுங்கள்.
வாய்ச்சவடாலும், அகம்பாவமும் உள்ள சிலர் அண்ணாமலையை வசை பாடுகின்றனர். இவர்கள் போதைப் பொருள் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்கள். அண்ணாமலை வந்து இரண்டு வருடம்தானே ஆகிறது. அதற்குள் ஏன் பயப்படுகிறீர்கள்?.
பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. மத்திய அரசு மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது உள்ளதா? அதனால் இந்த ஆட்சி தொடர ஆதரவு அளியுங்கள்” என்று கூறினார்.