வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் பலியானார்கள். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கலவரம் ஒடுக்கப்பட்டு தற்போது அங்கு அமைதி நிலவி வந்தது.
இந்த நிலையில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் குகி- ஜோமி சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள காங்போக்பி மாவட்டத்தின் எல்லையில் நேற்று காலை ஆயுதம் தாங்கிய இரண்டு கும்பலுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 23 மற்றும் 22 வயதுடைய அந்த இரண்டு இளைஞர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுடைய சிதைந்த உடல்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குக்கி ஜோமி பழங்குடியினர் ஒற்றுமை குழு சார்பில் 24 மணி நேர முழு அடைப்புக்கு- அழைப்பு விடுக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மணிப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மோதல் நடந்துள்ளது. இந்த வன்முறையை தொடர்ந்து அங்கு தேர்தல் பிரச்சாரம் முடக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று பக்கத்து மாவட்டங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மைத்தி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
கடந்த ஆண்டு மே மூன்றாம் தேதி வெடித்த பெரிய அளவிலான வன்முறையைத் தொடர்ந்து 11 மாதங்களாக நீடித்த அமைதிக்கு பிறகு தற்போது இந்த வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.