கொல்கத்தா:
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கார்பின் போஷ் 32, கேப்டன் ஹர்திக் பாண்டியா 26, திலக் வர்மா 20, சூர்யகுமார் யாதவ் 15, ரோஹித் சர்மா 15 ரன்கள் சேர்த்தனர்.
148 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மணிஷ் பாண்டே 45, ரோவ்மன் பவல் 40 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
கொல்கத்தா அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை பெற்று 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
அதேவேளையில் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட மும்பை அணிக்கு இது 9-வது தோல்வியாக அமைந்தது.
13 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, 9 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் மும்பை அணியின் கேப்டன ஹர்திக் பாண்டியா கூறியதாவது: பேட்டிங் குழுவாக, நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். திலக் வர்மாவும், நானும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடியிருந்தாலும், மேலும் சில பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தாலும் 15-20 ரன்களை கூடுதலாக எடுத்திருக்க முடியும்.
இது நிகழ்ந்திருந்தால் எங்களுக்கு வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்த சீசன் முழுவதும், நாங்கள் ஃபீல்டிங்கில் மிகவும் மோசமாகவே செயல்பட்டுள்ளோம்.
நாங்கள் நிறைய கேட்ச்களைக் கோட்டை விட்டுள்ளோம், இதை நிச்சயமாக யாரும் வேண்டுமென்றே செய்ய விரும்புவதில்லை.
ஆனால், ஆட்டத்தின் அந்தப் பகுதியில் இருந்து தப்பித்து ஓட முடியாது. வெற்றி பெற வேண்டும் என்றால், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடினமான கேட்ச்களாக இருந்தாலும் கூட பிடித்தாக வேண்டும். ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய கேட்ச்களை தவறவிட்டால் எப்போதும் போட்டியில் பின்தங்கியே இருக்க நேரிடும். மேலும் போட்டியில் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.
பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் இதுபோன்ற ஆடுகளத்தில் விளையாடுவதை நான் பொருட்படுத்துவதில்லை.
ஏனெனில் ஐபிஎல் தொடர் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாக மாறி வருகிறது.
இதனால் பந்துவீச்சாளர்கள் தங்களால் அணிக்கு உதவ முடியவில்லை என உணர்கிறார்கள். இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.
அபராதம் விதிப்பு: இந்த ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸின்போது 10-வது ஓவரை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசினார்.
அப்போது 4-வது பந்தை வீசுவதற்காக தனது பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது ஸ்டெம்பின் மேலிருந்த பெயில்ஸ்களை தட்டிவிட்டார்.
இது ஐபிஎல் நன்னடத்தை விதி 2.2-ன்படி குற்றமாகும். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் போட்டியின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.