லண்டன்:
ஐசிசி ஒருநாள் போட்டி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.
இதையொட்டி இங்கிலாந்து ஒருநாள் போட்டி, டி20 போட்டி அணிகளின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லமின் உதவிப் பணியாளர்கள் குழுவில் இணைய உள்ளார்.
இக்குழுவில் ஏற்கெனவே மார்கஸ் ட்ரெஸ்கோதிக், டிம் சவுதி, ஜீத்தன் படேல், சாரா டெய்லர் ஆகியோர் உள்ளனர்.
அடுத்த வாரம் இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள தொடரிலிருந்து பீட்டர்சன் தனது புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
கெவின் பீட்டர்சன் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவரது அனுபவமும், உள்ளூர் சூழல் குறித்த புரிதலும் கூடுதல் பலம் சேர்க்கக்கூடும் என்பதால் அவரை ஆலோசகராக நியமித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.