சென்னை:
‘தமிழகத்தில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்கு அரிவாள் வெட்டு உள்ளது.
சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழல் உருவாகியுள்ளது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்கு அரிவாள் வெட்டு தலைதூக்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து ரத்தச் சகதியில் சிக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடந்துள்ள கொடூரச் சம்பவங்களே இதற்குச் சான்றாகும்.
சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருத்தணியில் 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தை, வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் என்ற மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல், சாணார்பட்டியில் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்துப் போட்டுவிட்டுத் திரும்பிய வீரபத்திரன் என்பவர், மனைவி கண்முன்னே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை, சமயநல்லூரில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே சியாம் சுந்தர்ராஜன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். எண்ணூரில் ரயில் நிலையத்திலேயே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது.
பட்டப்பகல், நள்ளிரவு என்ற பாகுபாடின்றி தமிழகம் ரத்தத்தில் தோய்ந்துபோயுள்ளது. வீட்டிலும் வெளியிலும் மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது.
காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுகிறார்களா? சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ‘ரீல்ஸ்’ போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்கள் பாதுகாப்பில் காட்டு வார்களா? காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அராஜகத்துக்கு எப்போது முடிவு வரும்?
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்கிறது. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, சாக்குபோக்கு கூறாமல் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.