‘தடக்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘தடக் 2’ என்ற பெயரில் பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது – அறிவிப்பை வெளியிட்ட கரண் ஜோகர் !!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.சாதிய கொடுமைகளையும் அது எவ்வாறு மறைமுகமாக செயல்படுகிறது என்பதையும் ஒரு கல்லூரி காதல் கதை மூலம் அப்பட்டமாக கூறியிருப்பார் மாரி செல்வராஜ்.

பின் நாட்களில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் கூர்மையான சமூக அரசியல் கருத்துக்களை கூறுவதற்கு பரியேறும் பெருமாள் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் சமீபத்திய படங்களில் தவிர்க்க முடியாத கிளாசிக் படமாக மாறியது. இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் சாசங் கஹைதன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தடக்’ திரைப்படம் இளம் காதலர்களை சமூக வேறுபாடுகள் எவ்வாறு சேர விடாமல் தடுக்கிறது என்று பேசியிருக்கும். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

பரியேறும் பெருமாள் படத்தில் கதைக்களத்துடன் ஒத்துப்போவதால் ‘தடக்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘தடக் 2’ என்ற பெயரில் பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது என்ற அறிவிப்பை கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார்.

சித்தாந்த் சதுர்வேதி மற்றும் துருப்தி டிம்ரி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோவில் , கல்வி, கிளர்ச்சி, வகுப்பு மற்றும் ஜாதி பாகுபாடுகளுக்கு எதிரான பல முழக்கங்களைக் காண்பிக்கும் சுவர் ஓவியம் இடம்பெற்றுள்ளது.

தலித் காதல் முக்கியம், உங்கள் சிந்தனையை மாற்றுங்கள், சமூகத்தை மாற்றுங்கள், அமைதியைக் குலைக்க காதலர்கள் இங்கே இருக்கிறார்கள், மற்றும் எதிர்ப்பு சமத்துவமாகிறது உள்ளிட்ட வாசனகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், அதே சுவரில் ஒரு காலத்தில் ஒரு ராஜா, ஒரு ராணி இருந்தார்கள். அவர்களின் சாதிகள் வெவ்வேறாகும், இதனால் கதை முடிந்தது என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *