உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரிஷப் பண்ட்படைத்துள்ளார்.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, கொழும்பில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார வீசிய ஷார்ட்-பிட்ச் பந்து ரிஷப் பண்ட்டின் இடது கையில் பலமாகத் தாக்கியது.
இதனால் கடும் வலியால் அவதிப்பட்ட அவர், 15 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ‘ரிடையர்ட் ஹர்ட்’ முறையில் களத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் சரண்ஷ் ஜெயின் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கினார்.
சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் அரைசதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார். துருவ் ஜுரெலுடன் சேர்ந்து அவர் அமைத்த முக்கியமான பார்ட்னர்ஷிப், இந்திய அணியின் ஸ்கோரை வலுப்படுத்தியது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். அவர் 42 டெஸ்ட் போட்டிகளில் 2,948 ரன்கள் குவித்துள்ளார்.
சுப்மன் கில் 2,917 ரன்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 40 போட்டிகளில் 2,716 ரன்களுடன் 3-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 50 போட்டிகளில் 2,675 ரன்னுடன் 4வது இடத்திலும், விராட் கோலி 46 போட்டிகளில் 2,617 ரன்னுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.