மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களுக்கு கடுமையான போக்சோ தண்டனை வழங்கி இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் நடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
இந்த குற்றத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து மனநலம் பாதித்த மாணவிக்கும் அந்த குடும்பத்தாருக்கும் நியாயத்தை இந்த அரசு வழங்க வேண்டும். விலங்குகளை விட மிகவும் கீழ்த்தரமாக மனித விலங்குகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த அந்த கயவர்களை இந்த நாடும் மன்னிக்காது.
தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள் எனவே இந்த ஆளும் திமுக அரசு கடுமையான போக்சோ தண்டனை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமே இது போன்ற நிகழ்வுகள் எங்கும் நடக்காமல் பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளார்.