சென்னை :
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இரு தோல்வி கூட (பஞ்சாப், லக்னோவுக்கு எதிராக) நெருங்கி வந்து தான் தோற்றது.
பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ள குஜராத் அணி நடப்பு தொடரில் 5 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. சாய் சுதர்சன் (4 அரைசதத்துடன் 365 ரன்), ஜோஸ் பட்லர் (3 அரைசதத்துடன் 315 ரன்), கேப்டன் சுப்மன் கில் (215 ரன்), ரூதர்போர்டு (201 ரன்) ஆகிய 4 பேரும் தான் அந்த அணியின் பேட்டிங் தூண்கள். பெரும்பாலும் இவர்களில் யாராவது ஒருவர் கைகொடுத்து விடுகிறார்கள்.
பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (14 விக்கெட்), சாய் கிஷோர் (11 விக்கெட்), முகமது சிராஜ் (11 விக்கெட்) கலக்குகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் 204 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து டெல்லியை பதம் பார்த்த குஜராத் அணி வெற்றிப்பயணத்தை தொடரும் உத்வேகத்துடன் உள்ளது.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங், பந்து வீச்சு சீராக இல்லை.
ஒன்றில் வெற்றி பெற்றால் அடுத்த ஆட்டத்தில் உடனே தோற்று விடுகிறார்கள்.
இதுவரை அப்படி தான் நடந்துள்ளது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 112 ரன் இலக்கை கூட தொட முடியாமல் வெறும் 95 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றது.
பின்வரிசையில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் (7 ஆட்டத்தில் 34 ரன்), ரமன்தீப்சிங் (29 ரன்) முக்கியமான தருணங்களில் சோபிக்காதது பலவீனமாக உள்ளது. கேப்டன் ரஹானே (221 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் 200 ரன்களை தாண்டவில்லை.
பேட்டிங், பந்து வீச்சில் நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருந்தாலும், ஒருங்கிணைந்து முழு திறமையை காட்டினால் மட்டுமே குஜராத்தின் சவாலை சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.