மான்செஸ்டர்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக் கிறது. இதனால் இந்த டெஸ் டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
நிதிஷ்குமார் ரெட்டி, ஆகாஷ்தீப், அர்ஷ்தீப் ஆகி யோர் காயம் அடைந்ததால் இந்திய அணியோடு இணைந்துள்ள 24 வயது வேகப்பந்து வீரர் அன் சுதல் கம்போஜ் டெஸ்டில் அறிமுகம் ஆகிறார்.
முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது. இந்த தொடரில் அவர் 5 டெஸ்டில் 3 போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அவர் முதல் டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் விளையாடினார். 2-வது டெஸ்டில் இடம் பெறவில்லை. அவர் 2 டெஸ்டில் 12 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இன்று தொடங்கும் 4-வது டெஸ்டில் பும்ரா பல சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. 5 விக்கெட் கைப்பற்றினால் புதிய வரலாறு படைப்பார். ஒரு விக்கெட் எடுத்தால் இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் 50 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
5 விக்கெட் வீழ்த்தினால் இங்கிலாந்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஆசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். அவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் வாசிம் அக்ரமை (53 விக்கெட்) முந்துவார்.
பும்ரா மேலும் ஒருமுறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தால் சேனா நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா , இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக முறை (12 தடவை) 5 விக்கெட் எடுத்த முதல் ஆசிய பவுலர் என்ற பெருமையை பெறுகிறார். மேலும் இங்கிலாந்தில் முரளிதரன் சாதனையை சமன் செய்வார்.