சென்னை;
தமிழ்நாடு தடகளம் சங்கம் சார்பில் எஸ்.டி.ஏ.டி. ஆதரவுடன் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
டோக்கியோவில் அடுத்த மாதம் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணியில் இடத்தை எதிர்நோக்கி உள்ள குறிப்பிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு இது அணித் தேர்வுக்கான கடைசி போட்டியாகவும் அமைந்திருப்பதால் அந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது போன்ற கவுரவமிக்க தடகள போட்டியை தமிழகம் நடத்துவது இது 12-வது முறையாகும். கடைசியாக 2022-ம் ஆண்டில் இங்கு சீனியர் தேசிய தடகள போட்டி நடந்தது.
5 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இவர்கள் 10 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர், 800 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் உள்ளிட்ட பந்தயங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.
இதில் ஆசிய தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஓட்டப்பந்தய வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ், 18 வயதான அபினயா, ஏஞ்சல் சில்வியா ஆகிய தமிழர்களும் அடங்குவர்.
தமிழகத்தை தவிர்த்து, ஆசிய விளையாட்டில் இரட்டை சாம்பியனும், ஒலிம்பியனுமான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் (பஞ்சாப்), ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டெல்லியை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் (உயரம் தாண்டுதல்), முன்னாள் ஆசிய சாம்பியனான கேரளாவின் டிரிபிள் ஜம்ப் வீரர் அப்துல்லா அபூபக்கர், கார்த்திக் உன்னிகிருஷ்ணன், முரளி ஸ்ரீசங்கர் மற்றும் அம்லான் போர்கோஹைன் (அசாம்), பிரக்யான் சாகு (ஒடிசா), தேஜஸ் ஷிர்ஸ் (மகாராஷ்டிரா) உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த பிரபலங்களும் களம் இறங்குகிறார்கள்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டி.கே.ராஜேந்திரன், செயலாளர் சி.லதா மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.