”10 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக வளர்ந்துள்ளது” – மோடி ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா!!

மும்பை:
மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலத்தை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்’ என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு ‘அடல் சேது’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த அடல் சேது பாலம் பற்றி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, “2 மணி நேர பயணம் தற்போது 20 நிமிடங்களாக குறைந்து விட்டது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

நவி மும்பையில் இருந்து மும்பை, கோவாவில் இருந்து மும்பை, பெங்களூரில் இருந்து மும்பை என எல்லா பயணங்களும் அற்புதமான உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் உட்பட எல்லாமே அற்புதமாகவுள்ளது. 20 கிமீ நீளம் கொண்ட பாலத்தை 7-8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள். இதை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று அவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பகுதியில் உள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாகவும், 3.94 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *