சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்துவிட்டது. நாளையுடன் லீக் போட்டி முடிவடைகிறது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் 69-வது லீக்கில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர் கொள்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும்.
கடைசி 8 ஆட்டங்களில் 7-ல் வாகை சூடி வீறுநடை போடும் மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் 18 புள் ளியை எட்டும். குஜராத்தை விட ரன்ரேட்டில் வலுவாக இருப்பதால் மும்பைக்கு டாப்-2 இடம் உறுதியாகி விடும். தோற்றால் 4-வது இடத்திலேயே நீடிக்கும்.
டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 206 ரன்கள் குவித்தும் கடைசி ஓவரில் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தினால் அதன் புள்ளிகள் 19-ஆக உயரும். அப்போது அந்த அணிக்கு டாப்-2 இடங்கள் உறுதியாகும்.
கடைசி லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோவை தோற்கடித்தாலும் பிரச்சினை இருக்காது.
மாறாக பஞ்சாப் தோற்றால் 3 அல்லது 4-வது இடத்தில் இருக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட்டை பொறுத்தவரை டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டியை எட்ட இரண்டு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணியிலும் அதிரடி சூரர்கள் நிறைந்து இருப்பதால், ரன் விருந்தையும் எதிர்பார்க்கலாம்.
தொடர்ந்து 13 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் கால்சதத்தை எட்டினால் அது புதிய வரலாற்று சாதனையாக அமையும்.